`

பினாங்கு பயனீட்டாளர் சங்க இயற்கை தோட்டத்தில் வெளியீடு கண்டது நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு நூல்

நம்மாழ்வார் உலகம் முழுவதிலுமுள்ள, குறிப்பாக இந்தியாவின் கிராமங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் உதடுகளால் உச்சரிக்கப்படும் பெயர். இந்தியாவில் மட்டுமல்ல, மலேசியாவிலுள்ள இந்திய, சீன மற்றும் மலாய்க்கார விவசாயிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் குடும்ப மாதர்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ஜீவன் நம்மாழ்வார். விவசாயத்தில் இயற்கைப் புரட்சியை ஏற்படுத்திக்கொடுத்த அந்த மாமனிதரை மலேசியாவிலுள்ள சீன வம்சாவளியைச் சேர்ந்த விவசாயிகள் சீ·பு (sifu) என்றே அழைக்கின்றனர்.

அதன் உண்மையான அர்த்தம் நம்மாழ்வார் இயற்கைவிவசாயத்தின் குரு என்பதேயாகும்.நம்மாழ்வாரின் எளிமையான அணுகுமுறை, ஆனால் தெள்ளத் தெளிவான கண்டிப்பான இயற்கை விவசாயத்திற்கான வழிமுறைகள் பலதரப்பட்ட இரசாயன விவசாயிகளின் மனதை மாற்றியிருக்கின்றது என்பது நூறு விழுக்காடு உண்மை. இரசாயன விவசாயம்தான் பணத்தை வாரி வாரிக்கொடுக்கும் என்ற மிகப்பெரிய தவறான நம்பிக்கையில் விவசாயத்தையும், பூமியையும், சுற்றுச்சூழலையும் நாசப்படுத்திக்கொண்டு வந்த விவசாயிகளின் அபிப்பிராயத்தை உடைத்து அவர்களுக்கு இரசாயனமற்ற உரம், பூச்சி விரட்டி மற்றும் பயிர் ஊக்கிகளை அறிமுகம் செய்து வைத்தார் நம்மாழ்வார்.

அது மட்டுமல்ல, விவசாயிகளே அனைத்தையும் சுயமாக செய்து கொள்ளக்கூடிய வகையில் அது பற்றி பயிற்சி கொடுத்தவரும் அவரே. நம்மாழ்வாரின் ஒவ்வொரு பயிற்சியும் ஒவ்வொரு சொல்லும் விவசாயிகளின் எண்ணத்தில் ஈட்டி பாய்ந்தது போல் அமைந்தது. விவசாயிகளின் மொழியிலேயே விவசாயிகளிடம் அவர் பேசிய தோரணை, இரசாயன விவசாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆரம்பமானது. நம்மாழ்வார் ஒரு பசுமைப் போராளி. மலேசிய விவசாயிகள் அவரைத் தமிழகத்தில் குறிப்பாக வானகத்தில் சந்தித்தபோதெல்லாம் ஒரு புதிய தெம்போடு திரும்பினார்கள். அவருடைய மறைவு இந்தியாவுக்கு மட்டுமல்ல, மலேசிய விவசாயிகளுக்கும் பெரிய இழப்பு.

அந்த வகையில் இயற்கை விவசாயத்திற்காகவே தன் வாழ்நாளையே அர்ப்பணம் செய்த நம்மாழ்வார் பற்றிய ஒரு வாழ்க்கை வரலாற்றுப் பொக்கிஷத்தை விகடன் குழுமத்தின் பசுமை விகடன் இதழ் தொடராக எழுதி வெளியிட்டுள்ளது. நம்மாழ்வாரோடு மிக நெருக்கமாகப் பழகி அவரின் எண்ணத்தையும், தூர நோக்கு சிந்தனையையும் அறிந்த புரிந்த ஒரே செய்தியாளர் பசுமை விகடன் முதன்மை பொறுப்பாசிரியர் பொன். செந்தில்குமார்.

“நான் நம்மாழ்வார் பேசுகிறேன்” என்ற அவரின் வாழ்க்கை வரலாற்று நூல், அண்மையில் பினாங்கு நகரில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. பி.ப.சங்கத் தலைவரும், நம்மாழ்வாரின் நெருங்கிய நண்பருமான எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் அவர்கள் அந்த நூலை வெளியிட்டார். இந்திய இயற்கை விவசாய அமைப்பின் தலைவர் கிளாடு அல்வாரிஸ், திருச்சி பணிக்கம்பட்டியைச் சேர்ந்த மண்புழு விவசாயி கோபாலகிருஷ்ணன் மற்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் ஆகியோரோடு பசுமை விகடன் பொறுப்பாசிரியர் செந்தில்குமார் அவர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஏராளமான இந்திய, சீன மற்றும் மலாய்க்கார விவசாயிகள், ஆசிரியர்கள், குடும்ப மாதர்கள் கலந்துகொண்டனர். ஒரு தமிழ்ப் புத்தக வெளியீட்டு விழாவில் மற்ற இனத்தவர்கள் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.

Posted on
Tuesday, October 27th, 2015
Filed under:
General.
Tags:
Subscribe
Follow responses trough RSS 2.0 feed.
Trackback this entry from your own site.

No Comments Yet to “பினாங்கு பயனீட்டாளர் சங்க இயற்கை தோட்டத்தில் வெளியீடு கண்டது நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு நூல்”

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் is proudly powered by WordPress
Revolt Basic theme by NenadK. | Entries (RSS) and Comments (RSS).
Powered By Indic IME