`

விதைகளை பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவியுங்கள்

தை ஒரு விவசாயியின் பொக்கிஷம். பல ஆயிரம் ஆண்டுகளாக விவசாயிகள் விதைகளைக் கண்காணித்து, தேர்வு செய்து, பாதுகாத்து, பேணி வளர்த்து வருகின்றனர். ஆனால் ஒரு நூற்றாண்டு காலமாக உலகம் முழுக்கம் விதைகளின் பல்வகைமையில் பெருத்த இறக்கம் ஏற்பட்டுள்ளது. 2010ல் மட்டும் உலகின் விதைகளின் பல்வகைமை 75% இழக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் விவசாய நிர்வாகம் தன்னுடைய அறிக்கையில் வெளியிட்டுள்ளது. வேளாண் தொழிற்துறை மற்றும் அதனை ஆதரிக்கும் கொள்கைகளும் வேளாண் பல்வகைமைக்கு பெரிய உறுத்தலாக அமைந்து வருகிறது.

விவசாயத்திற்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை இப்பொழுது விவசாயிகள் காசு கொடுத்து வாங்குகின்றனர். இதற்கு முன்பதாக அவர்கள் விவசாயத்திற்குத் தேவையான அடிப்படைப் பொருட்களைத் தங்களுடைய பண்ணையிலேயே விளைச்சலாக்கியும் தயாரித்தும் வந்தனர். விதைகளை ஆக்கிரமித்து நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஆட்சி அச்சத்தை அளிப்பதாக உள்ளது. 10 பெரிய விதை நிறுவனங்கள் உலகில் உள்ள 55% விதை சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன. இவற்றில் மான்சான்தோ (Monsanto), டாவ் (Dow) டூபோன் (Dupont) மற்றும் சிஜேந்தா (Sygenta) ஆகியவையும் அடங்கும். கடந்த காலங்களில் விவசாயிகள் தங்களுக்குள் விதைகளை பரிமாற்றம் செய்து கொண்டனர்.

இதனால் விதைகள் வெவ்வேறான பருவ நிலையை, சீதோஷ்ண நிலையை, இட அமைப்பைத் தாங்கி வளரும் பக்குவத்தையும் முதிர்ச்சியையும் பெற்றன. இதனால் நமக்கு தரமான பயிர்களும், அவற்றின் மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்களும் கிடைத்து வந்தன.

வெவ்வேறு விதமான மண், பூச்சிகள், நோய்களைத் தாங்கி வளரும் சவால்களை அவர்கள் விதைக்கும் விதையிலிருந்து வரும் பயிர்கள் பெற்றிருந்தன. இந்த விதைப் பொக்கிஷத்தைப் பாதுகாக்கும் தலையாய பொறுப்பு பெண்களின் கைகளில் இருந்தது. ஆனால் வேளாண் தொழிற்துறையின் குறுக்கீடு இவையெல்லாவற்றையும் புரட்டிப்போட்டு விட்டது. வர்த்தக ரீதியான விதைகளைப் பரப்பியதன் காரணமாக விதைகளின் பல்வகைமை அழிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் விதை சேமிக்கும் நுணுக்கங்களையும் விவசாயிகளிடமிருந்து அபகரித்துக்கொண்டு விட்டது.

விதை தொடர்பான சட்டங்களும் தாவரங்கள் தொடர்பான உரிமங்களும் உயிரியல் தொழிற்துறையின் தேவைகளுக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. இந்த சட்டங்களின் மூலமாக விவசாயிகள் விதைகள் வாங்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். விதை மற்றும் வேளாண் இரசாயனங்களை வாங்குவதன் மூலம் விவசாயிகள் கடனுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். பாரம்பரிய விதைகளை இழந்து வருவதாலும், உலக வேளாண் பல்வகைமை அழிந்து வருகின்ற காரணத்தாலும், சீதோஷ்ண மாற்றம், பூச்சித்தொல்லை மற்றும் நோய்கள் ஆகியவை
விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக அமைந்துவிட்டது.

“அதிக விளைச்சலை” கொண்டு வரும் விதைகள் சீதோஷ்ண மாற்றத்தால் அதிக விளைச்சலைக் கொண்டு வருவதில்லை. விவசாயிகளுக்கு இப்பொழுது கிடைப்பதெல்லாம் அதிக இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட விதைகள்தாம். சுயேச்சை வாணிப ஒப்பந்தத்தின் காரணமாக விவசாயிகள் அதிக பாதிப்பு உள்ளாகி வருகின்றனர்.

விவசாயிகள் சொந்த விதைகளை சேகரிப்பதை நிறுத்திவிட்டால் அவர்கள் வேறு வழியின்றி விதைக் கம்பெனிகளிடமிருந்துதான் விதைகளை வாங்கியாக வேண்டும். டிரான்ஸ்பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தத்தில் விவசாயிகள் சொந்த விதை சேகரிப்பு, சொந்த விதை பயன்பாடு, விதை விற்பனை, விதை பரிமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள முடியாத விதத்தில் இந்த சட்டம் உள்ளது.

மலேசியா 2004ல் புதிய தாவரங்கள் வகை என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் வர்த்தக ரீதியான புதிய தாவர வகைகளுக்கான உரிமத்தைக் கோர முடியும். அதே நேரத்தில் விவசாயிகள், பூர்வீகக் குடி மக்கள் பாரம்பரியமாக பாதுகாத்து வரும் விதைகளுக்கும் அவர்கள் உரிமை கோர முடியும்.

தாவர பாதுகாப்பு தொடர்பான அனைத்துலக மாநாட்டில் (உபோவ் (Upove) மாநாடு) ஊபோவ் 1991 சட்டத்தை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். இந்த சட்டத்தைப் பின்பற்றினால் விவசாயிகள் விதைகளைப் பராமரிக்க முடியாது. அவர்களிடையே விதை பரிமாற்றம் செய்துகொள்ள முடியாது. அவர்களுடைய பண்ணையிலிருந்து விளைந்த விதைகளை விற்பனை செய்ய முடியாது. இது நடக்குமானால் விதைகள் கூட்டு நிறுவனங்களின் சொந்தமாகிவிடும்.

பன்னாட்டு நிறுவனங்கள் உலக விவசாயத்தைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும். ஆகையால் மலேசியா ஊபோவ் 1991ல் இணையக்கூடாது. விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களின் இந்தப் பிடியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள். சீதோஷ்ண மாற்றத்தை, பூச்சிகளை, நோய்களை எதிர்க்கும் விதைகளை அவர்கள் சேகரிக்க வேண்டும். உள்நாட்டு பாரம்பரிய விதைகளைச் சேகரிக்கும் பொருட்டு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தன்னுடைய சொந்த விதை வங்கியை ஆரம்பித்துள்ளது.

இங்கு பலதரப்பட்ட காய்கறிகள் மூலிகைகளின் விதைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விதைகள் குடும்பப் பெண்கள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. விதைகளில் பல்வகைமை, பல்லுயிர்ப் பெருக்கம், உணவு பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மலேசிய அரசாங்கம் கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். l விதைகள் பரிமாற்றம், விதை தொடர்பான தகவல்கள், அனுபவங்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

l ஒவ்வொரு விவசாயியும் தன்னுடைய சொந்த விதைகளைச் சேகரிக்க ஊக்குவிக்க வேண்டும். l ஊபோவ் சட்டம் 1991 சட்ட அமலாக்கத்தை முழுமையாக நிராகரிக்க வேண்டும். l மரபணு மாற்ற தொழிற்துறைக்கு அனுமதி வழங்கக்கூடாது. இது பல்லுயிர்ப் பெருக்கத்தையும் விவசாயிகள் மற்றும் பயனீட்டாளர்களின் வாழ்வாதாரத்தையும் பெரும் அளவில் பாதிக்கிறது.

Posted on
Wednesday, October 28th, 2015
Tags:
Subscribe
Follow responses trough RSS 2.0 feed.
Trackback this entry from your own site.

No Comments Yet to “விதைகளை பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவியுங்கள்”

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் is proudly powered by WordPress
Revolt Basic theme by NenadK. | Entries (RSS) and Comments (RSS).
Powered By Indic IME