`

வாழ்க்கையை சீரழிக்கும் மின்சிகரெட், சீஷா போதையில் இளைஞர்கள் : அமைச்சு இதனை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்

பத்திரிகைச் செய்தி 4.12.2015

மின்-சிகரெட் மற்றும் வேப்பிங்கை முற்றிலும் தடை செய்வதற்குப் பதிலாக அதற்கு அனுமதி அளிக்க முடிவு செய்திருக்கும் மலேசிய அமைச்சரவையின் முடிவு அதிர்ச்சியை அளித்திருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.
(Click the photo to view video)

இந்நாட்டின் இளைய தலைமுறையின் எதிர்காலம் சீரிழியாமல் இருக்க வேண்டுமானால் மின்-சிகரெட் மற்றும் வேப்பிங் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.

இவ்விடயத்தில் அமைச்சரவையின் இந்த அலட்சியப்போக்கு இன்னும் நிறைய சமுதாயப் பிரச்னைகளுக்கு வழி வகுத்துவிடும். சில அமைச்சர்கள் மின்-சிகரெட் மற்றும் வேப்பிங்கை தடை செய்வதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது மனதைக் காயப்படுத்தும் செயலாக உள்ளது. ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே மின்-சிகரெட் மற்றும் வேப்பிங் தடை செய்வதற்கு ஆதரவு அளித்திருக்கும் வேளையில் இன்னும் சில அமைச்சர்கள் எந்தக் கருத்தையும் கூறாமல் நடுநிலைவகித்து வருகிறார்கள்.

உலகத்தில் உள்ள 25 நாடுகள் மின்-சிகரெட்டை தடை செய்திருக்கும் வேளையில் நாமோ அதனைத் தடை செய்வதற்காக அறிவியல்பூர்வமான ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இது மக்கள் நலன் பொருட்டு மின்சிகரெட்டைத் தடை செய்த 14 நாடுகளை முட்டாளாக்குவதற்குச் சமமாகும். இது மக்கள் நலனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆதாயத்தை முதன்மையாகக் கருதும் போக்கையும் குறிப்பதாக அமைகிறது என்று இத்ரிஸ் கூறினார்.
புகைப்பது, மின்-சிகரெட் புகைப்பது மற்றும் வேப்பிங் இளைஞர்களின் ஆரோக்கியத்தையும் எதிர்காலத்தையும் குலைக்கும் என்று நாம் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், சீஷா என்ற பெயரில் இன்னொரு போதைப்பழக்கம் இளைஞர்களை ஆட்கொண்டு வருகிறது. இதுவும் ஒரு வகை மின்னியல் சிகரெட் ஆகும்.
எட்டு வயது சிறார்களும் சீஷா புகைக்க ஆரம்பித்துவிட்டதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வு காட்டுகிறது. 12 செண்டிமீட்டர் நீளத்தில் சிகரெட் வடிவில் இருக்கும் சீஷா பல வித வர்ணங்களில் வருகிறது.

சீஷா மவெ. 15க்கு விற்கப்படுகிறது. ஒருவர் ஒரு சீஷாவை 500 தடவை இழுத்துவிடலாம். ஆரஞ்சு, அன்னாசி, திராட்சை, மிரிண்டா, ஸ்ட்ரோபெர்ரி, கோலா, வெண்ணிலா, எலுமிச்சை என்று பல வித சுவைகளில் சீஷா கிடைக்கப்பெறுகிறது. இளைஞர்கள் விரும்பும் சுவைகளில் இதனைக் கொண்டு வருவதன் மூலம் இளைஞர்களை சீஷாவுக்கு அடிமையாக்கும் உற்பத்தியாளரின் உள்நோக்கம் வெளிப்படுகிறது என்றார் இத்ரிஸ்.

சீஷாவில் போர்மல்டிஹைட் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பார்மல்டிஹைட் நிறமற்ற எரிவாயு ஆகும். இது காட்டமான வாடையைக் கொண்டிருக்கும். ஒருவர் பார்மல்டிஹைட்டின் பாதிக்குப்புக்கு உள்ளாகும் பட்சத்தில் கண், மூக்கு, தொண்டை எரிச்சல் ஏற்படும். தொடர்ச்சியாக இதனோடு தொடர்பு கொள்பவர்களுக்கு தலைவலி, அயர்வு, தலைசுற்றல் ஏற்படும். போர்மல்டிஹைட் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜன்சி அறிவித்துள்ளது.

மின்-சிகரெட் புகைப்பவர்கள் அதற்கான திரவத்தை வாங்குவதற்காக மாதத்திற்கு மவெ. 340 செலவு செய்கிறார்கள். இதற்கான சாதனத்தை வாங்குவதற்கு மட்டுமே அவர்கள் மவெ. 500 செலவழிக்க வேண்டியுள்ளது.

மின்-சிகரெட், சீஷா மற்றும் வேப்பிங் பிரச்னைகள் பள்ளிகளில் பூதாகாரமாக உருவெடுத்துள்ளதாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு அளித்த புகாரில் கூறியுள்ளனர். மாணவர்களுடைய பையில் பள்ளிப்புத்தகத்தோடு சேர்த்து புகைப்பதற்கான நவீன கருவிகளையும் கொண்டு செல்கின்றனர். அவர்கள் புகைப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற மாணவர்களையும் புகைப்பதற்குத் தூண்டுகின்றனர். வேப்பிங் பல விதமான சுவைகளைக் கொண்டிருப்பதால் சிகரெட் புகைப்பதை விட மாணவர்கள் இதனையே அதிகம் விரும்புகின்றனர்.

இதே காரணத்திற்காக இது பெண்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கின்றது. வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகளின் மத்தியிலும் சீஷா பிரபலமாக இருக்கிறது. சீஷா புகைக்கும் பழக்கத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக சில மாணவர்கள் கூடுதல் நேர வேலை செய்வதாகவும், இன்னும் சில மாணவர்கள் பெற்றோர்கள் பள்ளிச் செலவு என்று பொய் சொல்லி காசு வாங்குவதாகவும் இத்ரிஸ் கூறினார்.

நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருத்தி இதர ஆண் மாணவர்களுக்கு சீஷா விற்றுக்கொண்டிருக்கும் வேளையில் பிடிபட்டாள். இது மற்ற பள்ளிக்கூடங்களிலும் இதே பிரச்னை இருப்பதற்கு ஒரு அறிகுறியாகும். ஒவ்வொரு மாணவரும் சீஷா வாங்குவதற்காக வாரத்திற்கு மவெ. 15 செலவு செய்வதாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட ஆசிரியர் அறிவித்தார். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் துர்நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவது வேதனையான விஷயமாகும் என்றார் இத்ரிஸ்.

சீஷா புகைக்கும் சாதனத்தில் எந்த வித லேபலும் கிடையாது. யார் தயாரிப்பாளர், எந்த நாட்டிலிருந்து வருகிறது மற்றும் அதன் பொருளடக்கம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சீஷா சட்ட ரீதியாக தடை செய்யப்படாத காரணத்தால், அதனை பொது இடம், பேரங்காடி மற்றும் பாசார் மாலாமில் எளிதில் வாங்கிவிடலாம்.

இவ்விஷயத்தில் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கு தொடருமானால், இன்னும் நிறைய இளைஞர்கள் மின்-சிகரெட், வேப்பிங் மற்றும் சீஷா ஆகியவற்றிற்கு எதிர்காலத்தில் அடிமையாவார்கள். இது எதிர்காலத்தில் இன்னும் நிறைய போதைப்பித்தர்களை உருவாக்கிவிடும் என்பதிலும் ஐயமில்லை. ஏனெனில் அதற்கான விதையை நாம் மின்-சிகரெட், வேப்பிங் மற்றும் சீஷாவை அறிமுகப்படுத்துவதன் வழி தூவிவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

மின்-சிகரெட், வேப்பிங் மற்றும் சீஷாவை மலேசிய அமைச்சரவை முற்றிலும் தடை செய்ய வேண்டும். நாட்டு மக்களுக்கு அது பெருத்த கேட்டினை உருவாக்குவதற்கு முன்பதாகவே அவர்கள் விரைந்து நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

எஸ்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Posted on
Thursday, December 3rd, 2015
Tags:
Subscribe
Follow responses trough RSS 2.0 feed.
Trackback this entry from your own site.

No Comments Yet to “வாழ்க்கையை சீரழிக்கும் மின்சிகரெட், சீஷா போதையில் இளைஞர்கள் : அமைச்சு இதனை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்”

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் is proudly powered by WordPress
Revolt Basic theme by NenadK. | Entries (RSS) and Comments (RSS).
Powered By Indic IME