`

நம்மையும் பூமியையும் பாதுகாக்கும் பொருட்டு இறைச்சியைத் தவிருங்கள்

பத்திரிகைச் செய்தி 26.11.2015

நம்முடைய ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பயனீட்டாளர்கள் இறைச்சி உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.
இறைச்சி உட்கொள்வது குறிப்பாக பதனம் செய்யப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வது வயிறு-பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாக புற்றுநோய் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அனைத்துலக மையம் ஒன்று கூறுகிறது.

இவற்றில் உப்பு சேர்க்கப்பட்ட, புளிக்கவைக்கப்பட்ட, புகைமூட்டம் செய்யப்பட்ட ஹோட் டோக்ஸ், சோசேஜ், மாட்டிறைச்சி, டின்னிலடைக்கப்பட்ட இறைச்சி அல்லது இறைச்சி சார்ந்த உணவுகளும் அடங்கும். இறைச்சிகளை குறிப்பாக பதனம் செய்யப்பட்ட இறைச்சிகளைக் குறைக்க வேண்டும் என்று இந்த புற்றுநோய் ஆய்வு மையம் கூறுகிறது.

வளங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிற காரணத்தால் மக்கள் இறைச்சி உண்பது அதிகரித்திருக்கிறது. இதில் மலேசியர்கள் விதிவிலக்கல்ல. 1962ல் ஒருவர் வருடத்திற்கு 13.2 கிலோகிராம் இறைச்சி உண்கொண்டுள்ளார். ஆனால் 2009ல் ஒருவர் வருடத்திற்கு 52.35 கிலோகிராம் உட்கொண்டிருக்கிறார். மக்களின் வருமானம் உயர்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் மலேசியப் பயனீட்டாளர்கள் உண்ணும் இறைச்சியின் அளவு இன்னும் அதிகரித்துக்கொண்டே போவதற்கான வாய்புக்கள் இருக்கின்றன என்றார் இத்ரிஸ்.

இறைச்சி உண்பதால் ஒருவருக்கு நோய் உண்டாவதற்கான மற்றும் இறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன. எந்த நாட்டில் இறைச்சி உண்பது அதிகமாக இருக்கிறதோ அந்த நாட்டில் இருதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகமாக இருக்கின்றன என்றார் இத்ரிஸ்.

பிராணிகளிலிருந்து தருவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் 40% அதிகரிக்கின்றன. பக்கவாதம், உடல் பருமன், குடல் வால் அழற்சி, எலும்பு மெலிவு நோய், மூட்டுவாதம், நீரிழிவு மற்றும் உணவு நச்சுத்தன்மை ஆகியவற்றையும் இறைச்சி உண்பது ஏற்படுத்தும்.

இறைச்சி ஒருவரின் ஆரோக்கியத்திற்கு உலை வைப்பதோடு நின்றுவிடுவதில்லை. இறைச்சி உண்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதகங்களை பயனீட்டாளர்கள் அறிந்து வைத்திருப்பதில்லை.

மக்களின் இறைச்சித் தேவையை அதிகரிப்பதற்காக வேண்டி கால்நடை வளர்ப்பு தொழிற்துறை துரித வளர்ச்சி கண்டுள்ளது. உலகத்தில் உள்ள 40% நிலங்கள் உணவுத் தேவைக்கான பயிர் வளர்ப்புக்காக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான நிலங்கள் கால்நடைகளின் உணவுத் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. கால்நடை வளர்ப்பே 18% பசுமைக் குடில் வாயுக்களுக்கு காரணமாக இருக்கின்றது. 70% அமேசோன் காடுகள் கால்நடை வளர்ப்புக்கள் மேய்வதற்காக அழிக்கப்பட்டுள்ளன.

இறைச்சிக்கான மிருகத்தை அறுப்பதற்கான கசாப்புக் களங்கள் அதி நவீன தொழிற்துறை இடங்களாக நிறுவப்பட்டுள்ளன. சில கசாப்புக் களங்களில் ஒரு நாளைக்கு 85,000 ஆடுமாடுகள், 70,000 பன்றிகள், 12 மில்லியன் பறவைகளை அறுத்துத் தள்ளுகின்றனர். இந்த கசாப்புக் களங்கள் இறைச்சிகளை உட்கொள்ளும் பொதுமக்களின் பார்வைக்குத் தென்படுவதில்லை. கசாப்புத் களங்களில் இந்தத் தொழிற்துறையின் ஒழுக்கவியலை பிராணிகள் உரிமை சங்கங்கள் கேள்வி எழுப்புகின்றன.
உலகின் பரந்த இயற்கைச் சூழலும் இறைச்சித் தேவையை நிரப்புவதற்காக அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

உணவு, நீர், நிலம் ஆகியவை மனிதத் தேவைக்குப் பயன்படுத்தப்படுவதைவிட கால்நடை வளர்ப்புத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பிராணிகள் நைட்ரோஜன், பாஸ்பரஸ், பொட்டேஸியம், மருந்து எச்சங்கள், நோயைக் கொண்டு வரும் நுண்ணுயிரிகள் மற்றும் உலோகங்களை விட்டுச் சென்று நீர் நிலங்களை மாசுபடுத்துகின்றன என்றார் இத்ரிஸ்.
ஒரு கிலோகிராம் மாட்டிறைச்சி தயாரிப்புக்கு 6.5 கிலோகிராம் தானியங்கள் தேவைப்படுகின்றது. தவிர, 15,500 சதுர அடி தண்ணீர் தேவைப்படுகிறது.
உலக அளவில் தயாரிக்கப்படும் 70% எண்டிபையோட்டிக்குகள் கால்நடை வளர்ப்புக்களில் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் மோசமான வளர்ப்பு சூழ்நிலையில் கால்நடைகளுக்கு நோய் வராமல் எண்டிபையோட்டிக்குகள் பாதுகாக்கின்றன. அதோடு கால்நடைகள் விரைவில் வளர்ச்சியடையவும் எண்டிபையோட்டிக்குகள் உதவுகின்றன.

கால்நடைகளுக்கு மனிதர்களைப் போன்றே எண்டிபையோட்டிக்குகள் கொடுக்கப்படுகின்றன.
கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான எண்டிபையோட்டிக்குகள்தான் கொடுக்கப்படுகின்றன. எண்டிபையோட்டிக்குகள் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், குறிப்பிட்ட பாக்டீரியாக்கள் அந்த எண்டிபையோட்டிக்குக்கு எதிராக தங்களுடைய ஆற்றலை வளர்த்துக்கொள்கின்றன. இதனால் நோயை விளைவிக்கும் நுண்ணுயிரிகளான எஸ்சேரிசியா கொலாய், சல்மோனேல்லா மற்றும் கெம்பிலோபெக்டர் ஆகியவை பெருகுகின்றன.

மலேசிய இறைச்சிகளில் எண்டிபையோட்டிக்கை எதிர்க்கும் பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இங்கு உண்ணப்படும் 50% கோழிகளில் இந்த வகை பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இறக்குமதி செய்யப்படும் கோழிகளில் 87 விழுக்காட்டில் எம்பிசிலினை எதிர்க்கும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன.

கால்நடைத் தீனிகளில் எண்டிபையோட்டிக் பயன்படுத்துவதை நிறைய நாடுகள் தடை செய்துவிட்டாலும், மலேசியாவோ இன்னும் 147 வகையான கலவைகளை (பெரும்பாலானவை எண்டிபையோட்டிக்குகள்) உணவில் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் உணவுச் சட்டத்தை மாற்றி அமைத்துள்ளது. இந்த உணவு சட்ட மாற்றத்திற்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

கால்நடை மற்றும் கோழிகள் வளர்ப்பின்பொழுது கொடுக்கப்படும் எண்டிபையோட்டிக்கைத் தடை செய்யுமாறு கோரி பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளது. ஐரோப்பிய மற்றும் தெற்கு கொரியாவில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோழிகளின் கழிவுகள் மாடுகளுக்கு உணவாகக் கொடுக்கப்படுகின்றன. சில மிருகங்களின் உடல் பாகங்கள் அவற்றின் சொந்த இனத்துக்கே உணவாகக் கொடுக்கப்படுகின்றன. இது பிறகு மாட்டு மூளை நோய்க்குக் காரணமாகிவிடுகிறது. புழுக்கள் பிராணிகளுக்கு உணவாகக் கொடுக்கப்படுகின்றன.

இறைச்சிகளை வாங்கும் பயனீட்டாளர்களுக்கு இதுவெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எண்டிபையோட்டிக், ஹோர்மோன், நோய்க்கிருமிகள் எல்லாம் இறைச்சிகளில் இருக்கின்றன என்பதை அறிந்து வைத்திருப்பதில்லை. இறைச்சித் தயாரிப்பில் சுற்றுச்சூழல் எப்படி பாதிப்புக்கு உள்ளாகிறது மற்றும் கால்நடைகளுக்கு எப்படிப்பட்ட கழிவுகள் எல்லாம் ஊட்டப்படுகின்றன என்பது அவர்களுடைய சிந்தனைக்கு எட்டாத ஒன்றாகவே இருக்கிறது.

25.11.2015 இறைச்சி உண்ணா நாள். ஆகையால் ஒவ்வொரு வருடமும் இந்நாளில் இறைச்சி உண்ணாமல் இருக்குமாறும் வருங்காலங்களில் இறைச்சி உண்பதை குறைத்துக்கொள்ளுமாறும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பயனீட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Posted on
Thursday, November 26th, 2015
Tags:
Subscribe
Follow responses trough RSS 2.0 feed.
Trackback this entry from your own site.

No Comments Yet to “நம்மையும் பூமியையும் பாதுகாக்கும் பொருட்டு இறைச்சியைத் தவிருங்கள்”

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் is proudly powered by WordPress
Revolt Basic theme by NenadK. | Entries (RSS) and Comments (RSS).
Powered By Indic IME