`

நிராகரிக்கப்பட்ட விலைக்குப் போகாத தேங்காய்கள் 2 வெள்ளிக்கு விற்கப்படுகின்றன சிதறும் செல்வத்தை சீரான செயல்களுக்கு செலவு செய்வோம் பி.ப.சங்கம் வேண்டுகோள்

பத்திரிகைச் செய்தி 20.1.2016

தைப்பூசம் நெருங்க நெருங்க, தேங்காய்களின் விலையும் உயர்ந்துக்கொண்டே போவது அதிர்ச்சியைத் தருகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகிறது.

அதே நேரத்தில் உடைபடாத நிராகரிக்கப்பட்ட தேங்காய்களையும் ஒரு சில வியாபாரிகள் பக்தர்களிடம் ஏமாற்றி விற்று விடுவதாகவும் பி.ப.சங்க கல்வி ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.
(தைப்பூசத்திற்குப் உடைக்கப்படும் தேங்காய்களுடன் என்.வி.சுப்பாராவ்)

மொத்தமாக பைகளில் வாங்கும்பொழுது அதனுள் நிராகரிக்கப்பட்ட தேங்காய்களையும் சேர்த்து விற்றுவிடுகிறார்கள் என்று அவர் கூறினார்.

ஒரு பையில் 50 தேங்காய்களைக் கட்டி, தேங்காய் உடைக்க வரும் பக்தர்களிடம் விற்கின்றனர். ஆனால் அந்தப் பையில் நல்ல தேங்காய்களோடு நிராகரிக்கப்பட்ட சுமார் 10 அல்லது 20 தேங்காய்கள் இருப்பதை தேங்காயைக் காசு கொடுத்து வாங்குபவர் அறிவதில்லை. உண்மையில் இப்படி நிராகரிக்கப்பட்ட தேங்காய்களுக்கும் ஒரு பக்தர் பணம் செலுத்துகின்றார். இதனால் ஒரு பக்தர் ஏறக்குறைய 20லிருந்து 30 ரிங்கிட் வரைக்கும் ஏமாற்றப்படுகின்றார் என்றார் சுப்பாராவ்.

தேங்காய் விலையேற்றம் தொடர்பாக புலம்பிக்கொண்டிருக்கும் பக்தர்கள் இந்நேரத்தில் உடைக்கும் தேங்காய்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தேங்காய் உடைப்பதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், யாரோ ஒருவர் ஆயிரக்கணக்கில் உடைக்கின்றார் என்பதற்காக நாமும் காரணம் தெரியாமல் அவரோடு சேர்ந்து ஆயிரக்கணக்கில் தேங்காய்களை உடைப்பது சரியாகாது என்றார் அவர்.

அநாதைகள், அபலைகள், கல்வியைத் தொடர முடியாமல் தவித்துக்கொண்டிருப்போர், பணம் இல்லாத காரணத்தால் நோய்க்கு சிகிச்சைபெற முடியாமல் இருப்போர் என்று தைப்பூச நாளில் இவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களின் சுமையைக் குறைக்கலாம். இதுவும் தெய்வத்திற்கு செய்யும் பெரிய சேவைதான்.

இப்பொழுது ஒரு இந்தோனிசியா தேங்காய் மவெ. 2.00லிருந்து மவெ. 2.50 வரைக்கும் விற்கப்படுகிறது. தைப்பூசத்தன்று அந்த விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது. அதே நேரத்தில் உள்ளூர் தேங்காய் மவெ. 2.00 வரைக்கும் விற்கப்படுகின்றது.

லட்சக்கணக்கில் தேங்காய்கள் உடைக்கப்பட்டன என்ற பத்திரிகைச் செய்திகளைப் பார்த்து பரவசமடைவதற்குப் பதிலாக, நூற்றுக்கணக்கான குடும்பங்களின் கண்ணீரை தைப்பூச பக்தர்கள் தீர்த்து வைத்தால் அது நம்முடைய சமயத்திற்குப் பெருமையாக இருக்கும்.

தேங்காய் ஓர் உணவுப்பொருள். இலட்சக்கணக்கில் உடைபடும் தேங்காய்கள் சேரும் இடம் குப்பைத்தொட்டிதான். தெய்வத்திற்குப் பிரார்த்தனையாக சமர்ப்பிக்கப்படும் பொருளை குப்பைத்தொட்டிக்கு போக அனுமதிக்கலாமா என சுப்பாராவ் கேள்வி எழுப்பினார்.

(V.பாண்டியன் மற்றும் M.ராஜகுமார், இருவரும் தைப்பூசத்திற்காக உடைபட போகும் தேங்காய்களை மூட்டையில் கட்டுக்கின்றனர்)

ஆகவே, தைப்பூசத்திற்குக் கூடுதலாக தேங்காய்களை உடைக்க எண்ணியிருக்கின்ற பக்தர்கள் இந்தக் கருத்தை மனத்தில் கொண்டு, ஆதரவற்று இருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை வழங்க, இந்தத் தைப்பூசத் தினத்தின்போது நிதி உதவி தர முன்வருமாறு பி.ப.சங்கம் கேட்டுக்கொள்வதாக என்.வி.சுப்பாராவ் கூறினார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி

Posted on
Tuesday, January 19th, 2016
Tags:
Subscribe
Follow responses trough RSS 2.0 feed.
Trackback this entry from your own site.

No Comments Yet to “நிராகரிக்கப்பட்ட விலைக்குப் போகாத தேங்காய்கள் 2 வெள்ளிக்கு விற்கப்படுகின்றன சிதறும் செல்வத்தை சீரான செயல்களுக்கு செலவு செய்வோம் பி.ப.சங்கம் வேண்டுகோள்”

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் is proudly powered by WordPress
Revolt Basic theme by NenadK. | Entries (RSS) and Comments (RSS).
Powered By Indic IME