`

மரங்களைக் காப்போம்! ஜாலான் மஸ்ஜிட் நெரிகிரியில் மரங்களை விரிவுபடுத்துவதை நிறுத்துங்கள்!

பத்திரிகைச் செய்தி 16.2.2016

பினாங்கு, ஜாலான் மஸ்ஜிட் நெகிரியில் 1.8 தூரத்திற்கு சாலையை விரிவாக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு பினாங்கு நகராண்மைக் கழகத்திடமும், பினாங்கு மாநில அரசாங்கத்திடமும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அதன் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூறினார்.

ஸ்காட்லாந்து சாலை, லோரோங் பாத்து லான்சாங் – ஜாலான் மஸ்ஜிட் நெகிரி சந்திப்பு மற்றும் ஜாலான் ஆயர் ஈத்தாம் – ஜாலான் மஸ்ஜிட் நெகிரி சந்திப்பு ஆகிய இடங்களில் 33 மரங்கள் அகற்றப்படவிருப்பதாக இருந்து, இப்பொழுது அகற்றப்படும் மரங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளதாகவும் இன்னும் குறைக்கப்படவிருப்பதாகவும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பினாங்கு நகராண்மைக் கழகம் அறிவித்திருந்தது.

அகற்றப்படும் மரங்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட சாலைகளில் வாகனங்கள் விரைவாக ஓடும் பொருட்டு சாலைகளின் ஓரங்களில் உள்ள இந்த மரங்கள் பலிகடாவாக்கப்படவிருக்கின்றன என்பதே உண்மை. நமக்கான மரங்களும் நாம் சுவாசிக்கும் வெளிகளும் வாகனங்கள் ஓடுவதற்காக இரையாக்கப்படுகின்றன. 2012ல் சாலைகளை விரிவாக்கும் திட்டத்தில் பெயர்த்தெடுக்கப்பட்டு மறுநடவு செய்யப்பட்ட மரங்களின் நிலை என்ன என்று இத்ரிஸ் கேள்வி எழுப்பினார்.

மரங்களைப் பலியிட்டு வாகனங்களை இலகுவாக நகர்த்தச் செய்ய வேண்டும் என்ற நோக்கே வேதனையை அளிக்கிறது. சாலைகளின் ஓரங்களில் உள்ள மரங்கள் நமக்கு பிராணவாயுவை அள்ளித் தருகின்ற. சூழலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் அதே நேரத்தில், காற்றைத் தூய்மையாகவும் ஆக்குகின்றன. மரங்கள் இயற்கையாக நிழல் தருவதோடு நின்றுவிடாமல் பெருக்கெடுத்து வரும் வெள்ள நீரை தடுத்து மெதுவாக மண்ணுக்குள் ஈர்த்துக்கொள்ள உதவுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, சாலையின் இரு மருங்கிலும் இருக்கும் மரங்கள் பச்சைப் பசேலென கண்ணுக்கு விருந்தாக மனித நாகரிகத்தின் சின்னமாக காட்சி அளிக்கின்றன.

பினாங்கில் பிரமாண்ட மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டு வருகின்றன. வாகனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினால் பினாங்கு தன் இயற்கை அழகை இழந்து வருகிறது. மரங்களின் இடத்தை காங்கிரிட் கட்டிடங்கள் நிரப்பி வருவதால் பினாங்கு நிம்மதியான வாழ்க்கைக்கு ஏற்பில்லாத இடமாக மாறி வருகிறது. ஆகையால் இருக்கின்ற மரங்களை பினாங்கு மாநிலம் இழந்துவிடாமல் இருக்க துரிதமாக நடவடிக்கைகளில் நாம் இறங்க வேண்டியது அவசியமாகும்.

பினாங்கு மாநிலம் தன்னுடைய வாக்கைக் காப்பாற்ற வேண்டும். பசுமையான பினாங்கு இயற்கையாகவே பசுமையாக இருத்தல் வேண்டும். மலைகளிலும் சாலைகளின் ஓரங்களிலும் இருக்கும் மரங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும் என்றார் இத்ரிஸ்.

பற்பல ஆண்டு பழமையான மரங்களின் மகத்துவம் புரியாமல் அவற்றை ஒரே நாளில் தகர்த்தெறிந்து சுற்றுச்சூழலுக்கு விளைவிக்கும் கேட்டினை நாம் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது.

மேம்பாடு என்ற பெயரில் இயற்கையைச் சூறையாடும் அடாவடித்தனங்களை நிறுத்தப் பாடுபடுவோம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Posted on
Wednesday, February 17th, 2016
Filed under:
General.
Subscribe
Follow responses trough RSS 2.0 feed.
Trackback this entry from your own site.

No Comments Yet to “மரங்களைக் காப்போம்! ஜாலான் மஸ்ஜிட் நெரிகிரியில் மரங்களை விரிவுபடுத்துவதை நிறுத்துங்கள்!”

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் is proudly powered by WordPress
Revolt Basic theme by NenadK. | Entries (RSS) and Comments (RSS).
Powered By Indic IME