`

மர அழிவைத் தடுப்போம்! மரம் நடுவதை ஊக்குவிப்போம்! பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் புவி தின அனுசரிப்பு

பத்திரிகைச் செய்தி 22.4.2016

நம் பூமியில் ஒவ்வொரு வருடமும் 15 பில்லியன் மரங்கள் அழிக்கப்படுகின்றன. இது ஒரு நிமிடத்திற்கு 48 காற்பந்து விளையாட்டுத் திடலை இழப்பதற்குச் சமமான அளவாகும். இந்த மர அழிவு சூழலுக்கு இழைக்கப்படும் ஒரு பெரிய வன்முறை. மலேசியாவில் அரிய பொக்கிஷமான மரங்கள், மேம்பாடு என்ற பெயரில் அழிக்கப்பட்டு வருகின்றன. மரங்களை வெட்டுவது, வியாபார நோக்கிலான பெரிய அளவிலான மறுநடவு, நகர்ப்புறமயமாக்கம், சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவையே மர அழிப்புக்குக் காரணமாக இருக்கின்றன. இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு மரங்கள் கட்டுப்பாடு இல்லாமல் வெட்டப்படுவது நிறுத்தப்படுவதும் நிறைய மரங்களை நடுவதுமே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

முதல் புவி தினம் 1970ல் கொண்டாடப்பட்டது. வருகின்ற 2020 புவி தினத்தின் 50வது வருட கொண்டாட்டமாகும். இதனை முன்னிட்டு 2020க்குள் 7.8 பில்லியன் மரங்களை நடுவதற்கு புவி தின அமைப்பு முடிவெடுத்துள்ளது. அதாவது ஒருவர் ஒரு மரம் நடுவதாகும்.

உலகம் முழுக்க 7.8 பில்லியன் மரங்களை நடும் இந்தப் பணியில், புவி தின அமைப்பு மூன்று முக்கியமான நோக்கங்களை அடைய விரும்புகிறது.

சீதோஷ்ண மாறுதல் மற்றும் தூய்மைக்கேட்டினை மட்டுப்படுத்துதல் : மரங்களை நடுவதன் மூலம் நம் சூழலில் உள்ள ஆபத்தான கரியமிலவாயு ஈர்த்துக்கொள்ளப்படுகிறது. ஒரு வருடத்தில் ஒருவர் வெளியாக்கும் கரியமிலவாயுவை ஈர்த்துக்கொள்ள 96 மரங்கள் தேவைப்படுகின்றன. மரங்கள் துர்நாற்றம், நைட்ரோஜன் ஒக்சைட், அம்மோனியா, சல்பர் டையோக்சைட் மற்றும் ஓசோன் போன்ற நச்சு வாயுக்களை ஈர்த்துக்கொள்கின்றன. காற்றில் உலாவும் தூசுக்களை தன்னுடைய இலைகளில், பட்டைகளில் இறுத்திக்கொண்டு காற்றை வடிகட்டித் தருகின்றன.

பல்லுயிர்த்தன்மையை பாதுகாத்தல் : சரியான மரங்களை நடுவதன் மூலம், பல்வகை இன மரங்கள் அழிவைத் தடுக்க முடியும். அதோடு உயிரினங்கள் இணக்கத்தோடு அவற்றிற்கு ஏதுவான சூழலில் வாழ்வதற்கான ஒரு சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்க முடியும்.

ஒரு சமூகத்தின் வாழ்வாதாரம் பாதுகாப்படும் : மரங்களை நடுவதன் மூலம் நீண்ட காலகட்ட பொருளாதார சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, போதுமான உணவு, எரிபொருள் மற்றும் வருமானம் ஆகியவை வளமாக இருப்பதை உறுதி செய்ய முடியும். அதிக மரங்கள் நடப்பட்ட பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிள்ளைகளுக்கு ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன. சிறார்களிடையே இருக்கும் கவனச் சிதறல், மிகைதுறுதுறுப்பு ஆகியவையும் மரங்களின் மூலம் கட்டுப்படுத்தப்படுவதாக ஆய்வுகள் காட்டுவதாக இத்ரிஸ் கூறினார்.

மரங்களை நடுவதால் இன்னும் பலவிதமான சுற்றுச்சூழல், பொருளாதார, சமூக, மனோதத்துவ ரீதியான நன்மைகளும் கூட விளைகின்றன. கட்டிடம் மற்றும் வீடுகளுக்கு அருகேயுள்ள மரங்கள் அவற்றின் வெப்பத்தினை ஈர்த்துக்கொண்டு குளிர்சாதனப்பெட்டியின் தேவையைக் குறைத்துவிடுகின்றன.

மரங்கள் நடுவதின் மகத்துவத்தைக் கருத்தில் கொண்டு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இந்த புவி தினத்தில் மரம் நடும் பிரச்சாரத்தில் பங்கெடுத்துக்கொள்கிறது. புவி தினம் என்றில்லாமல் மற்ற தினங்களிலும் மரம் நடுவதைத் தொடர்வதோடு மட்டுமல்லாமல் மரங்கள் தொடர்ந்து அழிக்கப்படுவதையும் தடுப்போம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தனைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Posted on
Thursday, April 21st, 2016
Tags:
Subscribe
Follow responses trough RSS 2.0 feed.
Trackback this entry from your own site.

No Comments Yet to “மர அழிவைத் தடுப்போம்! மரம் நடுவதை ஊக்குவிப்போம்! பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் புவி தின அனுசரிப்பு”

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் is proudly powered by WordPress
Revolt Basic theme by NenadK. | Entries (RSS) and Comments (RSS).
Powered By Indic IME