`

சிகரெட்டில் வெற்று பேக் முறையைக் கொண்டு வாருங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பத்திரிகைச் செய்தி 30.5.2016

ஜூன் 2009லிருந்து மலேசியா சிகரெட்டு பேக்கட்டுக்களில் படத்தோடு கூடிய எச்சரிக்கை வாசகங்களைப் பொறித்து வெளியிட்டது. அதிலிருந்து சுமார் 92.8 விழுக்காட்டினர் (93.2 விழுக்காடு ஆண்கள், 74.7 விழுக்காடு பெண்கள்) இந்த எச்சரிக்கை வாசகங்களை உற்று கவனித்துள்ளதாக மலேசிய அனைத்துலக புகையிலை ஆய்வகம் (GATS) அறிவித்துள்ளது. அபாய படத்தோடு கூடிய எச்சரிக்கை வாசகங்கள் பலன் தரக்கூடியவை என்பதையே இது காட்டுகிறது. வேறு பல நாடுகளுள் இந்த முறையை அமலாக்கம் செய்துள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை கட்டுப்பாடு பேரவையின் கட்டுரை 11க்கு இணங்க இது அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. மலேசியா இந்தப் பேரவையின் ஓர் அங்கமாகும். 23.9.2003ல் இதற்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திட்டுள்ளது. மலேசியா புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு இந்தப் புகையிலைக் கட்டுப்பாட்டு பேரவை ஒரு வழிகாட்டியாகும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

தற்பொழுது மலேசியாவில் சிகரெட் பேக்கட்டின் முன் பக்க அட்டையில் 50 விழுக்காடும் பின் பக்க அட்டையில் 60 விழுக்காடும் படத்தோடு கூடிய எச்சரிக்கை வாசகங்களால் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் எஞ்சியுள்ள இடத்தை மிகவும் அழகான எழுத்துக்களைக் கொண்டு நிரப்புவதில் புகையிலைக் கம்பெனிகள் அதிக அக்கறை காட்டி வருகின்றன. இது இந்த எச்சரிக்கை வாசகங்கள் புகைப்போரை பாதிக்காமல் இருக்க அவர்கள் எடுத்து வரும் முயற்சிகளாகும் என்றார் இத்ரிஸ்.

சாதாரண பேக்கட் முறையை முதலில் அமலுக்குக் கொண்டு வந்த நாடு ஆஸ்திரேலியா ஆகும். ஆஸ்திரேலியா இதனை டிசம்பர் 2012ல் அமலுக்குக் கொண்டு வந்தது. இதற்கு என்ன அர்த்தமென்றால் சிகரெட் உற்பத்தியாளர்கள் பிரண்டு பெயர் மற்றும் அதன் மணத்தை குறிப்பிட்ட அளவில், எழுத்து மற்றும் இடத்தில் மட்டுமே பொறிக்க முடியும். இதனோடு சேர்த்து சிகரெட்டில் உள்ள நச்சுக்களின் அளவையும் வரி செலுத்திய முத்திரையையும் பதிக்க வேண்டும். எல்லா சிகரெட் பேக்கட்டுக்களும் அதன் வர்ணத்தையும் சேர்த்து ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா வெற்று பேக்கட் முறையை கொண்டு வந்த பிறகு 2010லிருந்து 2013 வரைக்கும் 14 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே புகைப்பவர்களின் எண்ணிக்கை 15.1 விழுக்காட்டிலிருந்து 12.8 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.
இதனோடு சேர்த்து புகையிலைக்கு விதிக்கப்பட்ட 25% வரி அதிகரிப்பும் ஆஸ்திரேலியாவில் புகைப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது என்றார் இத்ரிஸ்.
இந்த ஆண்டின் புகையிலை கருப்பொருள் “வெற்று பேக்கட் முறைக்கு தயாராகுங்கள்” என்பதாகும். இதற்கு ஒப்ப இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் சிகரெட்டில் வெற்று பேக்கட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. மலேசியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் வெற்று பேக்கட்டை அறிமுகப்படுத்துவற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன. அவர்கள் இதனை வெற்றிகரமாக செயல்படுத்துவார்களேயானால், புகையிலை கட்டுப்பாட்டு பேரவையின் நடவடிக்கைகளுக்கு இது புது உத்வேகத்தை அளிக்கும் என்றார் இத்ரிஸ்.

தங்கள் சிகரெட்டுக்களை கவர்ச்சிகரமாகக் காட்டும் பொருட்டும், இன்னும் நிறைய மக்களை புகையிலைக்கு அடிமையாக்கும் பொருட்டும் புகையிலைக் கம்பெனிகள் சிகரெட்டு பேக்கட்டுகளில் படங்களைப் பொறித்து வருகின்றன. புகை பிடிப்பவர்களின் இருவரில் ஒருவர் புகையிலை சம்பந்தப்பட்ட நோய்களால் இறந்துபோகிறார். புகைப்பது உடலில் உள்ள அநேகமாக எல்லா உறுப்புக்களையுமே சேதத்திற்கு உள்ளாக்குகிறது. நிறைய நோய்களை உண்டாக்குகிறது. புகைப்பவரின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையே உருக்குலைக்கிறது என்றார் இத்ரிஸ்.
புகைப்பது சம்பந்தப்பட்ட நோய்கள் ஒவ்வொரு வருடமும் 10,000 பேரைக் (4ல் ஒருவர்) கொல்கின்றன. ஒவ்வொரு பேருந்திலும் 40 பேர் என மொத்தம் 250 பேருந்துக்கள் விபத்துக்குள்ளாகி அனைவரும் இறந்துபோவது போன்று இதனை எடுத்துக்கொள்ளலாம்.

ஒருவர் ஒரு நாளைக்கு மவெ. 17 விலையுள்ள ஒரு பேக்கட் சிகரெட்டை புகைத்து முடிப்பாரானால் 30 நாளைக்கு அவர் மவெ. 510 செலவு செய்ய வேண்டியுள்ளது. ஒருவருடைய மாத வருமானம் மவெ. 1500 ஆக இருக்கும் பட்சத்தில் புகைப்பதற்காக அவர் தன்னுடைய வருமானத்தில் 34 விழுக்காட்டினை செலவு செய்கிறார் என்று அர்த்தம். இது அவர் குடும்பத்திற்காக செய்ய வேண்டிய இதர செலவினங்களையும் பாதிக்கும். குடும்பத்திற்கு தேவையான உணவு மற்றும் பல்வேறான அடிப்படைத் தேவைகளை இந்தத் துர்ப்பழக்கத்தின் காரணமாக அவர் பூர்த்தி செய்ய முடியாமல் போய்விடும் என்றார் இத்ரிஸ்.

இப்படிப் பணத்தை விரயமாக்கும் ஒரு பழக்கத்தால் வேறு பல மோசமான பாதிப்புக்களும் ஏற்படுகின்றன. புகைப்பதால் ஏற்படும் மிகவும் முக்கியமான 3 நோய்களை குணப்படுத்துவதற்கு 2005ல் மட்டும் அரசாங்கம் மவெ. 2.92 பில்லியனை செலவழித்துள்ளது. புகைப்பது தொடர்பான நோய்கள் ஏற்படும்பொழுது ஒரு தொழிலாளியின் ஆக்கப்பூர்வமான பணிகள் முடக்கப்பட்டு விடுகின்றன. அவருடைய நோய்க்கு கம்பெனி பணம் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. குடும்ப வருமானத்தையும் மருத்துவ சிகிச்சைக்காக செலவிட நேருகிறது. புகைப்பது தொடர்பான நோய்களால் இறந்து போனவரின் குடும்ப வருமானமும் பாதிக்கப்படுகிறது என்றார் இத்ரிஸ்.

குடும்பத் தலைவர் புகைக்கும்பொழுது அவர் இழுத்து விடும் புகையை குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக இழுக்கும் பட்சத்தில் அவர்களும் புகையிலை சம்பந்தமான நோய்களால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றார் இத்ரிஸ்.

இறந்து போன சிகரெட் புகைப்பாளர்களுக்கு மாற்று தேடும் பொருட்டு புகையிலைக் கம்பெனிகள் இளையோர்களைக் குறி வைத்து நகர்ந்து கொண்டிருக்கின்றன. சிகரெட் பேக்கட்டுக்களை இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் கவர்ச்சியற்றதாக ஆக்க வேண்டும் என்றால் வெற்று பேக்கட் முறையே சிறந்த வழி என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Posted on
Sunday, May 29th, 2016
Filed under:
General.
Tags:
Subscribe
Follow responses trough RSS 2.0 feed.
Trackback this entry from your own site.

No Comments Yet to “சிகரெட்டில் வெற்று பேக் முறையைக் கொண்டு வாருங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்”

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் is proudly powered by WordPress
Revolt Basic theme by NenadK. | Entries (RSS) and Comments (RSS).
Powered By Indic IME